Pages

Monday, April 3, 2017

எதை எழுத என் கவியில்?

ஆண்டுகள் பல ஆனதன் பின் - நெஞ்சைத்
தீண்டும் தமிழ்ச்சொற்களை பிரிந்திருக்கேன் - என்று
மீண்டும் எழுதுகோலை எடுத்திருந்தேன்- நான் 
உவகை கொண்டு கவிவடிக்க துடித்திருந்தேன் 

கவிதை என்றவுடன் கற்பனையில் - பழம்
கவிஞர் தோரணையில் உவமை வரும் 
இயற்கை அழகு வர்ணனையும் - அகம்
இன்பமுறும்  சொற்றொடரும் பின்னேவரும் 

இப்படியே கற்பனையில் நான் களித்திருக்க - என்னை 
அப்படியே சொற்பனத்தினின்று எழுப்பியது 
அத்தனையும் தாறுமாறாகவே தென்படுகின்ற - நம்மைச்
சுற்றியேயுள்ள யதார்த்த வாழ்க்கையது 

கவிஞனென்றால் சற்று பொய்யுரைப்பான் 
இன்னும் அழகிற்கு அழகினைக் கூட்டிடவே - ஆனால் 
ஆரம்பமே போலி ஆகிடையில் - நான் 
ஆயிரம் வர்ணித்து என்ன பயன் ?

எதைப்பற்றி நான் எழுத என் கவியில்? - மனிதம் 
உயிர்ப்பற்று இருக்கும் வேளை தனில்
இதோ சில உதாரணம் உங்களுக்காய் - எங்கள் 
மாய உலகினை துகிலுரிக்க 

ஓடி விளையாடு பாப்பா என்ற 
பாரதி இப்போது என்ன சொல்வார் 
அடுக்ககங்களுக்குள் முடங்கிக்கிடக்கும்  
இயந்திரங்களாய்ப்போன சிறார்களுக்கு ?

தன் கவியிலே நல் ஒழுக்கம்தனை உவந்த 
கம்பரும் கலங்கிப்போய்விடுவார் - தற்பொழுதிலே 
வெளிவரும் செருகேடுகளில் 
பிணைக்கப்படும் கொச்சைத்தமிழ் கேட்டு 

தமிழுக்கும் கொச்சைக்கும் தொடர்பில்லை- என்ற
தருணமும் இருந்தது ஒரு காலம் - ஆனால் 
கொச்சையும் ஆபாசமும் தற்போது நாகரிகம் - அதனால் 
இடமில்லை செந்தமிழுக்கும் ஒழுக்கத்திற்கும் 

மென்மையாக தென்றல் எம்மை வருடிச்செல்லும் 
என்றெல்லாம் புனைந்து எழுத நான் விளையவில்லை 
ஏனெனில், காற்றினிமைத்திவலை கொண்டு நிதம்
காற்றையே போலியாக்கும் சக்திகொண்டதிந்த சமுதாயம் 

வஞ்சியவள் தனை உவமித்த கவிஞனெங்கே? - அவன் 
இப்போது வந்து பார்க்கவேண்டும் பெண்ணியத்தினை 
பெண்ணடிமைக்கெதிராக குரலெழுப்பிய - அவன் 
உரிமை கூட இப்போது கேள்விக்குறியே!

விஞ்ஞானத்தைப்பற்றி கூறவாவேண்டும் - அதன் 
ஆக்கங்களோ அளப்பரியவை - ஆனால் 
அழிவுகளோ அதை விடைப்பெரியவை - அட 
நமக்கென்ன வந்தது - இப்போது 
பணம் ஒன்றே அனைத்தையும் வெல்லுது!

இதுவரைக்கும் என் புலம்பலை வாசிப்பது அரிது - அப்படி 
வாசித்திருந்தால் தங்கள் மனதைரியம் சிறப்பிற்குரியது- இக் 
கவிதையால் பெரிதாய் என்ன செய்துவிடமுடியும் என்றெனக்குத்தெரியாது -ஆனால், இது உங்களை ஒரு நொடியாவது நிறுத்தி மனமுறுத்தியிருந்தால் 
அதுவே எனக்கு பெரிது! 

எப்பொழுது எழுத நினைத்தாலும் கோபமும் அறிவுரையும் தானா - அடுத்த தடவை
கவிதையை சற்று மாற்றியே எழுதவேண்டும் நீலா! - என்ன செய்வது மாற்றியெழுதப்படாமல் கறை தோய்ந்த கதைகள் இருக்கின்றனவே பேனா! - அடுத்தமுறை உன் முனையின் உயிர்ப்பிற்காய் காத்திருப்பவளாய் நான்...




Monday, February 24, 2014

என் பள்ளி நாட்கள்...


நினைத்துப்பார்க்கிறேன் 
என் பள்ளி நாட்களை 
நெகிழ்ந்து போகிறேன் 
நெஞ்சம் கனத்துப்போகிறேன்

பட்டாம் பூச்சியாய் பறந்த
பாலர் வகுப்பு பருவம் - அதில் 
குறும்புத்தனம் புரிந்து - தினம் 
குதூகலிக்கும் பல தருணம் 

கற்பனையில் கதைகள் சொல்லி 
களிப்புக்கொண்ட பருவம் - அதில் 
கவனமுடன் படிப்பதிலும் 
இருந்தது என் கவனம் 

செல்லச்சண்டை பிடித்துக்கொள்ளும் 
நண்பிகளின் கூட்டம் - பின்பு
அடுத்த நொடியில் இணைந்துகொண்டு 
நடத்திடுவோம் ஆர்ப்பாட்டம்

இடைநிலை பிரிவை - நான் 
அடைகின்ற தருணம் 
இடையிடையே போர் அனர்த்தங்களும் 
அரங்கேறும் தினமும் 

படிப்படியாய் அப் போர் 
மூண்டெழுந்திடவே - அதில் 
மாண்டழிந்தது - என் 
பட்டப்படிப்பு கனவே 

விடை தெரியா வினாவாக 
இருந்த எதிர்காலம் 
விடை தேடி வந்தடைந்தது 
அந்நிய தேசம் 

எதிர்கொண்ட சவால்களோ 
எண்ணற்றவை - ஆயினும் 
என் அன்னையின் அரவணைப்பின் முன் 
அவை சொற்பமானவை 

கருகிய செடி 
மீண்டும் துளிர்த்தது போலவே - என்
கல்வியும் துளிர்விட்டு 
தழைத்தது மீண்டுமே

கண்களில் நீருடன் இரைமீட்கிறேன்
கனவாய் தோன்றும் என் பள்ளி நாட்களை 
இருப்பினும் இன்னும் நான் பயணிக்கிறேன் 
என் எதிர்கால இலட்சியம் தனை நோக்கியே. 


நீலா. 



Friday, November 22, 2013

வித்து விதையாகுவதே விருட்சமாகத்தானே !

ஓர் விருட்சம் மலர்வது - அதன்
சந்ததியை விஸ்தரிக்க 
காய் கனியாகுவது - அதன் 
வித்துக்களை மண்ணில் விதைக்க 
வித்துக்கள் விதையாகுவது - புது 
விருட்சங்கள் தழைக்க
ஆகையால்,
வித்துக்கள் விதையாகுவது பழைய சந்ததியின்  முடிவல்ல 
புதியதொரு தலைமுறையின் தொடக்கம்!
இது விதயாகிப்போகும் வீர மறவர்களுக்கும் பொருந்தும் 
ஏனென்றால், 
அவர்கள் 'விடுதலை' எனும் விருட்சத்தை 
உருவாக்கும் வித்துக்கள் என்பதால்!  


நீலா 

Monday, July 8, 2013

முடிவென்பதும் ஆரம்பமே ...

தொடக்கம் என்பது  இருக்கும் போது 
முடிவென்பது சகஜமே 
ஆனால் 
முடிந்துவிட்டதே  என்று 
சோர்ந்துவிடாதே மனமே 
சிந்தித்துப்பார் ...
ஒரு முற்றுப்புள்ளி முடிவில் நீயும் 
இன்னும் சில புள்ளிகள் வைத்தால் 
முடிவென்பதும் ஆரம்பமே. 

நீலா 

Monday, December 3, 2012

சோகம்

சோகம் நம் விசித்திர வாழ்வின் 
ஒரு பாகம் 
ஆமை போல வேகமின்றி மனதைவிட்டு 
விலகிட தயங்கிடும் 
பாவம்! என்று இரங்கவைக்கும் 
நவரசத்தில் ஓர் இரசம் 
மனதில் இருள் பெருக்கி 
பிணமாய் உலவ வைக்கும் இயந்திரம் 
இலாபமே இல்லாத துக்கத்தில் 
கிடைத்திடும் ஊதியம். 

நீலா.

"ஆகிடு"

ஓர் கவிதையை வடித்திட - நீ 
கற்பனைக்கதவினை திறந்திடு 
ஓர் சாதனை படைத்திட - நீ 
பல கஷ்டங்கள் பட்டிடு 

அன்பினில் திளைத்திட - மற்றோருக்கு 
உன் நேசத்தை நீ கொடு 
பார்போற்ற மிளிர்ந்திட - நீ 
பண்புடனே திகழ்ந்திடு 

இன்பத்தை அருந்திட - நீ 
துன்பத்தை சகித்திடு 
மானுடனாய் திகழ்ந்திட - நீ 
மாண்போடு வாழ்ந்திடு 

வாழ்வின் உயர் இலக்கினை அடைந்திட 
இப்படி நீ ஆகிடு. 
 நீலா.


Tuesday, July 10, 2012

காலம்

நான் கடந்து வந்த காலத்தை திரும்பிப்பார்த்தேன் - அது 
இன்ப துன்ப நினைவுகளோடு இறந்துவிட்டது 
நான் நிகழுகின்ற காலத்தை நினைத்துப்பார்த்தேன் - அது 
நிதானமாக சிந்தித்துச்செயற்படென்றது 
மலரப்போகும் காலத்தை நான் மனதில் கொண்டேன் - அது 
வரப்போகும் சவால்களை எதிர்கொள் என்றது 

ஏன் காலம் என்பது மானிடரை ஆட்டிவைக்குது?
அது காலகாலமாக நம் வாழ்வை ஆட்சிசெய்யுது. 


நீலா 

Saturday, May 12, 2012

என் தாய்

வாழ்க்கையெனும் பட்டறையில் 
புடம் போடப்படும் தங்கம் 

பசும் பூந்தோட்டத்திலே
பூத்திடும் வெள்ளைப்  பூவின் உள்ளம்

கடமையே கண்ணாகக் 
கனன்றிடும் நெஞ்சம் 

கடவுளையே மிஞ்சிடும் 
தியாகத்தின் சின்னம் 

நான் பொக்கிஷமாய் பேணவேண்டிய
'தங்கக்கிண்ணம்' 

அவள் தான் என் தாய் 
இது திண்ணம்!




நீலா

Thursday, April 12, 2012

எனக்குள்ளே கேள்விகள் ???

இயற்கை கற்றுத்தந்ததா - எமக்கு 
இயலாமையை ?
இறைவன் கற்றுத்தந்தானா - எமக்கு 
பொறாமையை ?
குழந்தை கற்றுத்தந்ததா - எமக்கு 
கபட நாடகத்தை ?
குருவிக்கூட்டம் கற்றுத்தந்ததா - எமக்குள் 
 வேற்றுமையை ?

கற்றறிய வேண்டியவை பல இருந்தும் 
கண் பார்வையற்றவராய் நிதம் வாழ்வது ஏன் ?
உற்ற உயிர் உடலை விட்டு பிரிவதையே அறியாத 
 நிலையற்ற வாழ்வில் போலி வேடமும் ஏன் ?

ஆறறிவாம் பகுத்தறிவை பரமனவன் தந்தாலும்,
சிற்றறிவால் சிதறுண்டு - வாழ்வின் உயர் 
அர்த்தமத்தை அதர்மத்தால் அழிப்பதாலோ - நிதம் 
தர்மமே அள்ளுண்டு போகின்றதோ ... ???





நீலா

Thursday, March 8, 2012

அறிவியல்

ஆறு அறிவு மனிதரினாலே 
உலகில் வந்த அறிவியல் 
ஆழ வேரூன்றி அழித்திட முடியா
அபாயத்தின் அறிகுறிக்கருவிகள்

கண்டுபிடிப்புகள் பற்பல 
கண்கவர் காட்சிகள் பற்பல 
எண்ணில் அடங்காத எண்ணங்கள் 
                                                      சொல்லில் அடங்காத கலை வண்ணங்கள் 


இத்தனையும் மனிதரின் மகிழ்விற்கே - ஆனால் 
இயற்கை வளத்தின் அழிவிற்கே 
கற்பனைக்கு எல்லை ஏதிங்கே - ஆனால் 
அளவு மீறினாலோ அமுதம் விஷமிங்கே 

விஞ்ஞானத்தின் விந்தைகளோ 
வானை விஞ்சுதங்கே 
மெஞ்ஞானத்திலோ பிரபஞ்ச ஒழுங்கு 
மீறுது இங்கே 

பூமித்தாயவளின் தாழாத நெஞ்சக்குமுறலினால் 
பூமித்தட்டுகளோ தடுமாறுகின்றன அங்கங்கே 
நிலநடுக்கங்கள் ஒருபுறம் எரிமலைகள் மறுபுறம் 
ஆழிப்பேரலையின் கோரதாண்டவமோ மறுகணம் 

காலநிலை மாற்றத்தின் எதிரொலியாய் 
பனிப்பாறைகளோ துருவங்களில் சமுத்திரமாய் 
மழைக்காலமின்றி மாரி மழை கோடையிலே 
ஊழிக்காலத்தின் வெள்ளப்பெருக்கோ 
ஊரை மேவுதிங்கே 

எனினும்...


ஆண்டாண்டு காலமாய் அறிவியலில் அடியெடுத்து வைத்து 
மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்றவாறு 
கண்டத்துக்கு கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கி
அண்டத்தை அழிக்கின்ற சபதம் வேண்டாமிங்கே 

ஆறறிவு மனித ஆற்றலினால் 
ஆக்கம் பெற்ற அறிவியல் 
சீரான இயற்கையின் இயங்கு சக்தியைச்சிதைக்காமல் 
பாரதனைப்பாதுகாத்து பரிமளிக்கச்செய்யட்டுமே !!!




நீலா